LOADING...
அமெரிக்க பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்! 250-வது சுதந்திர தினத்திற்காக அதிரடி மாற்றம்
டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன

அமெரிக்க பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்! 250-வது சுதந்திர தினத்திற்காக அதிரடி மாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 29, 2026
09:42 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்புப் பதிப்பு (Limited-edition) பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்திய இந்த நடவடிக்கை, நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது. வரும் ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ள அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டின் வடிவமைப்பில் சுதந்திரப் பிரகடனத்தின் மேல் அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வப் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும். அதிபரின் கையெழுத்து பிரத்யேகமாகத் தங்க நிறத்தில் இடம்பெறும். அமெரிக்காவை உருவாக்கிய முன்னோடிகளின் (Founding Fathers) ஓவியமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் இடம்

வாஷிங்டனில் மட்டும் கிடைக்கும் பிரத்யேக வசதி

இந்தச் சிறப்பு பாஸ்போர்ட்கள் குறித்து வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த டிரம்ப் கருப்பொருள் கொண்ட பாஸ்போர்ட்கள் வாஷிங்டனில் மட்டுமே கிடைக்கும். இருப்பு இருக்கும் வரை மட்டுமே இவை வழங்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும், இதற்குத் தனிப்பட்ட முறையில் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், விண்ணப்பதாரர்கள் இந்தச் சிறப்புப் பதிப்பைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

அதிரடி முடிவு

மரபுகளை மாற்றும் அதிரடி முடிவுகள்

வழக்கமாக ஜனநாயக நாடுகளில் பாஸ்போர்ட்கள் கலாச்சார இடங்கள் அல்லது வரலாற்றுச் சின்னங்களையே (உதாரணமாக: நிலவில் மனிதன் கால் வைத்தது, சுதந்திர தேவி சிலை) கொண்டிருக்கும். ஆனால், பதவியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவரின் படம் பாஸ்போர்ட்டில் இடம்பெறுவது நவீன ஜனநாயகத்தில் மிகவும் அபூர்வமானது. கடந்த மாதம் அமெரிக்க கரன்சிகளில் அதிபர் டிரம்பின் கையெழுத்து இடம்பெறும் என நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. கென்னடி மையம் உள்ளிட்ட சில கூட்டாட்சி கட்டிடங்களில் அதிபரின் பெயர் மற்றும் பதாகைகள் ஏற்கனவே இடம்பெறத் தொடங்கியுள்ளன. சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் இத்தகைய "பிராண்டிங்" நடவடிக்கைகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

Advertisement