
Factcheck: டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கான போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டது உண்மையா?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குத் தடை செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் ஐநாவில் செப்டம்பர் 23 அன்று ஆற்றிய உரை மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் பெயரை போர்த் துறை என மாற்ற முடிவெடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக நோபல் பரிசு குழு அவரை நிரந்தரமாக நீக்கியதாகக் கூறும் ஒரு போலியான செய்திக்குறிப்புப் பரவத் தொடங்கியதிலிருந்தே இந்தச் சர்ச்சை உருவானது. இருப்பினும், இந்தச் செய்தி புனையப்பட்டது என உண்மைச் சரிபார்ப்புக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அசோசியேட்டட் பிரஸ் இதுபோன்ற தலையங்க அறிக்கைகளை வெளியிடுவதில்லை என்பதையும், நோபல் பரிசுக் குழுக்கள் வேட்பாளர்கள் மீது வாழ்நாள் தடையை விதிப்பதில்லை என்பதையும் உண்மைச் சரிபார்ப்பாளர்கள் உறுதிப்படுத்தினர்.
நோபல் பரிசு
நோபல் பரிசு பரிந்துரைகள் ரகசியம்
நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் இரகசியமாக வைக்கப்படுகின்றன. அவை நார்வே நோபல் கமிட்டி உட்பட உரிய குழுக்களால் ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, டிரம்ப் இன்னும் நோபல் பரிசுக்குத் தகுதியுடையவராக இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனக் கூறப்படுகிறது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகியது, நட்பு நாடுகளுடன் வர்த்தகப் போர்கள் மற்றும் பரிசுக்காக வெளிப்படையாக லாபி செய்தது போன்ற அவரது வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகள் அமைதியை வளர்ப்பதற்கான பரிசின் நோக்கத்திற்கு முரணாக இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.