
'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்
செய்தி முன்னோட்டம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
"நான் ஏமாற்றமடைந்துவிட்டேன்... எனினும், நான் அவரைப் பார்க்கத்தான் போகிறேன்," என்று டெலாவேரில் உள்ள ரெஹோபோத் பீச்சில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய பைடன் கூறியுள்ளார்.
டெல்லியில் வைத்து நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார்.
செப்டம்பர் 10ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் தான் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், அவர் வியட்நாமிற்கு சென்று அமெரிக்க-வியட்நாம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
dujwu
இந்திய பயணத்தை எதிர் நோக்கி இருக்கும் அமெரிக்க அதிபர்
ஜி20 உச்சி மாநாட்டை அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிப்பார் என்றும், சீனக் குழுவை பிரதமர் லீ கியாங் தலைமை தாங்குவார் என்றும் நேற்று செய்திகள் வெளியாகின.
ஜி 20 மாநாட்டை ஜி ஜின்பிங் தவிர்ப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், தனது இந்திய பயணம் குறித்து ஜோ பைடனிடம் கேட்டதற்கு, அவர், "நான் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
"எனக்கு இன்னும் கொஞ்சம் ஒருங்கிணைப்பு தேவை. அந்த இரண்டு நாடுகளும்(இந்தியா மற்றும் வியட்நாம்) அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அது மிகவும் உதவியாக இருக்கும்" என்று ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.