ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு
தமிழக கலாசாரம், வரலாறு, பாரம்பரியம், உணவு போன்ற சிறப்பம்சங்களை எடுத்துரைத்து ஜெர்மனியர்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கில், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறும் சர்வதேச சுற்றுலாப் பேரவையில் தமிழகத்தின் சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெர்லினில் தமிழக சுற்றுலா அரங்கை திறந்து வைத்த அமைச்சர் கே.ராமச்சந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் சிறந்த சுற்றுலாத் தலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், தமிழகத்தின் அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களையும் எடுத்துரைக்கும் புகைப்பட சிற்றேட்டை ஜெர்மன் மொழியில் அவர் வெளியிட்டார் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வழங்கும் சலுகைகள்
2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றுலாதுறை, தற்போது புத்துயிர் பெற்றுள்ளது என்றும் குறிப்பாக 2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் அதிகமான மக்கள் தமிழகத்திற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவக வசதிகள், சுற்றுப்பயண திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், ஸ்னாக் பார்கள் போன்ற வசதிகளை வழங்குகிறது. தமிழ்நாடு அரங்கின் திறப்பு விழா ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியோடு ஆரம்பமானது. இந்த அரங்கில் டூர் ஆபரேட்டர்கள், ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள், தொழில்துறையில் உள்ள மற்றவர்களுக்கான ஸ்டால்கள் உள்ளன. இது சர்வதேச சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு தங்கள் பயணங்களைத் திட்டமிட உதவும் என்று நம்பப்படுகிறது.