பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம்
பிரேசில் நாட்டின் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே இருக்கிறது. இடதுசாரி தலைவர் லூலா, பிரேசிலில் அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் போல்சனாரோ என்பவரை தோற்கடித்து வெற்றிபெற்றார். இவருக்கான பதவியேற்பு விழா ஒரு வாரத்திற்கு முன் நடைபெற்றது. ஜெய்ர் போல்சனாரோ என்பவர் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஆவார். அதிபர் லூலா அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க, போல்சனாரோ ஆதரவாளர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த ஆதரவாளர்கள், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதனால், பிரேசில் நாடே பெரும் பரபரப்பில் சிக்கியுள்ளது.
பிரதமர் மோடி வருத்தம்
பிரேசிலில் நடந்த கலவரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர், "ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று அடிக்கோடிட்டு, பிரேசில் அரசாங்க அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவித்துளளார். "பிரேசில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்" என்று பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூலாவை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.