இத்தாலியில் கிரிக்கெட் விளையாட தடை விதித்த நகர மேயர்; பின்னணி என்ன?
அட்ரியாடிக் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய இத்தாலிய நகரமான மோன்பால்கோன் கிரிக்கெட் விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது. புதிய ஆடுகளத்தை உருவாக்குவதற்கு இடவசதி மற்றும் நிதி பற்றாக்குறை மற்றும் கிரிக்கெட் பந்துகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் காரணமாக மேயர் அன்னா மரியா சிசிண்ட் இந்த தடையை விதித்தார். நகரத்தில் கிரிக்கெட் விளையாடி பிடிபட்டவர்களுக்கு 84 யூரோ வரை அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தங்களைப் போன்ற வெளிநாட்டவர்களால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வங்கதேசத்தில் இருந்து அங்கு குடியேறியவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தடையானது தனித்துவமான இன அமைப்பைக் கொண்ட நகரமான மோன்பால்கோனில் நிலவும் பதட்டங்களின் அடையாளமாக மாறியுள்ளது.
நகரின் மூன்றில் ஒரு பகுதி வெளிநாட்டினர்
நகரின் 30,000 குடியிருப்பாளர்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் 1990களின் பிற்பகுதியில் கப்பல் கட்டுமானத்தில் பணிபுரிய குடிபெயர்ந்த வங்கதேசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மொன்ஃபால்கோனில் உள்ள பங்களாதேஷிகளில் பலர், ஐரோப்பாவின் மிகப் பெரிய மற்றும் உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமான ஃபின்காண்டியேரி கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிய இத்தாலிக்குச் சென்றுள்ளனர். தீவிர வலதுசாரி லீக் கட்சியின் உறுப்பினரான மேயர் சிசிண்ட், இந்த மக்கள்தொகை மாற்றத்தால் மோன்பால்கோனின் கலாச்சார அடையாளம் ஆபத்தில் இருப்பதாக நம்புகிறார். 2016ஆம் ஆண்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிசின்ட், நகரத்தின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் கிறிஸ்தவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் பல நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளார்.