காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல்
துபாயில் இன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தொடங்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதலின் விளைவுகளுடன் போராடும் நாடுகளுக்கு நிதி உதவி செய்ய கிட்டத்தட்ட 200 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி துபாய் சென்றார். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு நிதி உதவி செய்ய முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் COP28 உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.
ஒவ்வொரு நாடும் எவ்வளவு நிதியுதவி வழங்க உள்ளன?
உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு என்பது COP28 இன் உயர்மட்டப் பிரிவாகும். துபாய் சென்றிருக்கும் பிரதமர் மோடி, உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டை தவிர, மேலும் 3 நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க காலநிலை உடன்படிக்கைக்கு இன்று கிட்டத்தட்ட 200 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதனையடுத்து, ஒவ்வொரு நாடும் தனித்தனியாக எவ்வளவு நிதியுதவி அளிக்க உள்ளது என்பதை அறிவித்து வருகிறது. முதற்கட்டமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் $100 மில்லியனும், பிரிட்டன் குறைந்தது $51 மில்லியனும், அமெரிக்கா $17.5 மில்லியனும் ஜப்பான் $10 மில்லியனும், ஐரோப்பிய ஒன்றியம் $245.39 மில்லியனும், ஜெர்மனி $100 மில்லியனும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளன.