பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர்
உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் பெண்களின் அடிப்படை உரிமைக்கு கூட போராட வேண்டி இருக்கும் நிலையில், டாட்டூ போட்டுக்கொள்வது என்பது தனிப்பட்ட சுதந்திரத்தை கொடுக்கிறது என்கிறார்கள் டாட்டூ பிரியர்கள். இந்த வகையில், சீன டாட்டூ ஆர்ட்டிஸ்ட் சொங் ஜியாயினின் டிசைன்கள், பெண்களுக்கு எழுச்சி ஏற்படுத்தும் விதமாக இருக்கிறதாம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஜியாயின் தனது பெண் வாடிக்கையாளர்களை நேர்காணல் செய்து, அந்த பெண்களின் நினைவுகள், நம்பிக்கைகள் மற்றும் அச்சங்களை மையப்படுத்தி டாட்டூ வரைந்து வருகிறார். "நீங்கள் டாட்டூ போட்டுக்கொள்ளும் போது, நான் என் உடலைக் கட்டுப்படுத்துகிறேன் என்று நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள்" என்று சொங், AFPயிடம் கூறியுள்ளார்.
ஒரு குழந்தை கொள்கை முதல் பெண்ணியம் வரை
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு குழந்தை கொள்கை போன்ற கட்டாய இனப்பெருக்கச் சட்டத்தின் மூலம் பெண்களின் உடல்கள் மீது நீண்ட காலமாக கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த, ஒரு குழுந்தை கொள்கை தற்போது கைவிடப்பட்டாலும், பல தசாப்தங்களாக பெண்களின் அடிப்படை உரிமையை இது வெகுவாக பாதித்து வந்தது. அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசாங்க அதிகாரிகள், ஏறக்குறைய அனைத்து வகையான பெண்ணியச் செயல்பாடுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் நீண்டகாலமாக கட்டுப்படுத்தி வருகின்றனர். அந்நாட்டின் பழமைவாத மனப்பான்மையினால் பெண்களின் உடல் வெறும் போகப் பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தன்னை ஒரு பெண்ணியவாதி என்று கூறும் சொங், தனது டாட்டூகள் பெண்களின் குரலாக இருக்கும் என்று நம்புகிறார்.