சீனாவில் பரவும் கொரோனாவில் புதிய வகைகள் இல்லை: உலக சுகாதார நிறுவனம்!
சீனாவில் கொரோனா வரலாறு காணாத அளவு பரவி வருகிறது. இதற்கான தரவுகள் எதுவும் இல்லாததால் செய்திகள் வெளியிடும் தகவல்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியது இருந்தது. இந்நிலையில், சீனாவில் பரவும் கொரோனா வைரஸைப் பற்றிய புதிய தகவலை உலக சுகாதார நிறுவனம்(WHO) வெளியிட்டுள்ளது. "BF.7 மற்றும் BF.5.2 கொரோனா வகைகளைத் தவிர புதிய கொரோனா வகைகள் எதுவும் சீனாவில் கண்டுபிடிக்கப்படவில்லை" -WHO அறிக்கை. சமீபத்தில் 7 வகையான கொரோனாக்கள் சீனாவில் பரவி வருகிறது என்று எழுந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக WHO இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. சீனாவில் பரவும் 95% கொரோனாவுக்கு காரணம் BF.7 மற்றும் BF.5.2 ஓமிக்ரான் வகைகளே என்கிறது WHO தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அறிக்கை.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து:
கொரோனா பாதிப்புகள், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆகிய எண்ணிக்கைகளை சீனா குறைத்து கூறுவதாக WHOவின் அவசரகால இயக்குனர் மைக் ரியான் நேற்று(ஜன:5) தெரிவித்திருந்தார். இதை விவரிக்கையில் அவர், "இடர்களை தடுக்க அவற்றின் தரவுகள் நமக்கு மிகவும் அவசியம். சரியான தரவுகளை சீனா பதிவு செய்ய வேண்டும். இன்று வரை சீனா அதை செய்யாமல் இருக்கிறது" என்றார். மேலும், இது குறித்து நேற்று ஒரு மாநாட்டில் பேசிய WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சீனாவில் பரவி வரும் நோய்தொற்றுகளால் ஏற்படும் உரிழப்புகளை எண்ணி WHO கவலை கொண்டுள்ளது என்றார். கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் மிகவும் முக்கியமானது என்றும் WHO சீனாவிற்கு வலியுறுத்தியுள்ளது.