சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர்
சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று(பிப் 14) ஈரான் அணுசக்தி பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் என்றும் இஸ்லாமிய குடியரசின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் தனது ஆதரவை வெளிப்படுத்தினார் என்றும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் சீனா தொடர்ந்து "ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும்" என்று ஜி ஜின்பிங் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை சந்தித்த போது தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை மட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அது சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஈரானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பைக் கடினமாக்கியது. தற்போது, அமைதியான காரணங்களுக்காக அணுசக்தியை மேலும் மேம்படுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா
ஆனால், 2018இல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போதுமான அளவு அது செய்யவில்லை என்று கூறி, ஒப்பந்தத்தை கைவிட்டு, பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தார். இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதற்காக சீனா அமெரிக்காவை விமர்சித்தது மட்டுமல்லாமல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. செப்டம்பரில், சீனாவில் இருக்கும் 5 நிறுவனங்கள் உட்பட ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது. ஈரான் தொடர்ந்து தனது அணுசக்தித் திட்டத்தை விரைவுபடுத்தும் வரை ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்காது என்று அமெரிக்க அரசு கூறி இருந்தது.