சீனாவின் மக்கள் தொகை சரிவு: 60 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பெரும் மாற்றம்
சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதன்முறையாக சரிவடைந்துள்ளது. தேசிய பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள் என்று இருப்பதால், இது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டிற்கான சீன மக்கள் தொகை 1.4118 பில்லியன் என்று கணக்கிடப்பட்டது. இது 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கையில் இருந்து 850,000 குறைவாக உள்ளது. சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கையை குறைக்க ஒரு குழந்தை கொள்கையைப் பின்பற்றிய காலம் போய், தற்போது மக்கள்தொகை வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
பிறப்பு விகிதம், இறப்பு விகிதம்
2021ஆம் ஆண்டில் 7.52ஆக இருந்த பிறப்பு விகிதமும் தற்போது 6.77 ஆக குறைந்திருக்கிறது. சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் இன்று(ஜன:17) வெளியிட்டிருக்கிறது. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா பிறப்பு விகிதம் ஒப்பீடு(2021): சீனா- 7.52 அமெரிக்கா- 11.06 இங்கிலாந்தில் 10.08 இந்தியா- 16.42 இதே அளவில் சென்று கொண்டிருந்தால் சீனாவை பின்னுக்கு தள்ளி, உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா என்ற நிலை வரலாம். மேலும், கடந்த ஆண்டு சீனாவில் முதன்முறையாக பிறப்பு எண்ணிக்கையை விட இறப்புகள் அதிகரித்துள்ளன. 1976ஆம் ஆண்டிற்கு பின், பிறப்பு எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை.