வீடு, ஷாப்பிங் மால் என சீனாவில் வாழும் வெளிநாட்டினரை 24 மணி நேரமும் கண்காணிக்கும் சீனக் காவல்துறை
செய்தி முன்னோட்டம்
சீனாவில் வசிக்கும் மற்றும் வருகை தரும் வெளிநாட்டினரை கண்காணிப்பதற்காக, அந்நாட்டு பொது பாதுகாப்புத் துறை உருவாக்கிய 'Dynamic Control Platform for Overseas Personnel' என்ற ஒருங்கிணைந்த ரகசியத் தரவுத்தள அமைப்பை இணையவழிப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளனர். இணையவழிப் பாதுகாப்பு ஆய்வாளர் மார்க் ஹோஃபர், சீன பொது பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்புடைய இணையதளங்களை ஆய்வு செய்தபோது இந்த ரகசிய தரவுத்தளம் வெளிச்சத்திற்கு வந்தது. 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இணைந்து நடத்திய ஜங்ஜியாகோ நகரக் காவல்துறையால் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட இந்த இணையத் தளம், தற்காலிகமாக பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளி இணையத்தில் இருந்தது, பின்னர் அகற்றப்பட்டது.
விவரங்கள்
கண்காணிப்பு வலையில் யார் யார்?
சீனக் காவல்துறையின் சின்னத்துடன் இயங்கிய இந்தத் தரவுத்தளத்தில் சுமார் 12,000 இடஞ்சார்ந்த பதிவுகள் சேகரிக்கப்பட்டிருந்தன.
அதில், ஜங்ஜியாகோ பகுதியில் வாழும் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விவரங்கள், பெய்ஜிங்கில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் நிகழ்நேர கண்காணிப்பு சுயவிவரங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தது.
அதோடு, 'Five Eyes' கூட்டணி நாடுகள் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து), ஈரான், இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட முக்கிய நாடுகளை சேர்ந்தவர்கள், வெளிநாட்டு துணையை மணந்தவர்கள் மற்றும் தைவான், ஹாங்காங் வாசிகள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைப்பு
நவீன தரவு ஒருங்கிணைப்பு
சீனாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் இருப்பிடம், பயணம், வேலை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தனியார் மற்றும் பொது தரவுகளை உடனுக்குடன் ஒருங்கிணைத்து, அவர்களின் அன்றாட வாழ்வைக் கண்காணிக்கும் நோக்கில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பு சீன அரசின் எல்லை கடந்த கண்காணிப்பு முறையை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.