சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை எனவும், போரை தூண்டியதில்லை எனவும் கூறியுள்ளார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ள ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் பைடனுடன் ஆன சந்திப்புக்கு பின் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க-சீனா வர்த்தக கவுன்சில் மற்றும் தேசிய குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி ஜின்பிங், "சீனாவின் மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளிலோ, அதற்கு முன்னரோ சீனா, போரை தூண்டவோ, ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை ஆக்கிரமிக்கவோ இல்லை" என்றார்.
சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்த பைடன்
மாநாட்டில் அதிபர் ஜி உடனான சந்திப்பில், அமெரிக்க அதிபர் பைடன், சின்ஜியாங், திபெத், ஹாங்காங் ஆகிய பகுதிகளில் சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்தார். "உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் அனைத்து நாடுகளும் சர்வதேச மனித உரிமை உறுதிமொழிகளை மதிப்பதற்கான பொறுப்பு இருப்பதை அடிக்கோடிட்டு காட்டிய பைடன்", "சின்ஜியாங், திபெத், ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில், சீன மக்கள் குடியரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை தெரிவித்தார்" என வெள்ளைமாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்ற சீன அதிபர், அமெரிக்க அதிபருடன் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் போதை பொருட்களை கட்டுப்படுத்துதல், ராணுவ தொடர்புகளை புதுப்பித்தல் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.