பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு பஜனைகளை ரத்து செய்யுங்கள் அல்லது "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா டுடே செய்தியின்படி, மெல்போர்னின் வடக்கு புறநகர்ப் பகுதியான கிரேகிபர்னில் உள்ள காளி மாதா கோவிலின் பூசாரிக்கு செவ்வாயன்று(பிப்-14) பஞ்சாபியில் பேசும் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. பெண் பூசாரி பாவனா, 'நோ காலர் ஐடி'யிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளார். 'நோ காலர் ஐடி' என்றால் அழைப்பை பெறுபவருக்கு தொலைபேசி எண் காட்டப்படாது. அந்த மர்ம நபர் 'அமிர்தசரஸ்-ஜலந்தர்' பேச்சு வழக்கில் பஞ்சாபி மொழி பேசி இருக்கிறார். அவர் மார்ச் 4ஆம் தேதி நடக்கவிருக்கும் பஜனையை ரத்து செய்ய வேண்டும் என்று மிரட்டியதாக பாவனா கூறியுள்ளார்.
தைப் பொங்கல் திருவிழாவின் போது சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்
"பாடகர் ஒரு தீவிர இந்து என்பது உங்களுக்கே தெரியும். அவர் வந்தால் கோவிலில் பிரச்சனையாகி விடும்." என்று அந்த மர்ம நபர் கூறியதாக பாவனா தெரிவித்துள்ளார். "நான் அவரிடம் கெஞ்சினேன், பாய் ஜி! இது காளி அம்மனின் இடம், குரு மகாராஜ்(குரு கோவிந்த் சிங்) கூட இங்கு வந்து பிரார்த்தனை செய்திருக்கிறார். இங்கே யார் வந்து எதற்காக சண்டை போட போகிறார்கள்?" என்று அதற்கு பாவனா பதிலளித்ததாக கூறியுள்ளார். சமீபத்தில், காலிஸ்தானி இயக்கத்தை ஆதரிப்பவர்களால் ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் உள்ள இந்து கோவில்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரியில், கேரம் டவுன்ஸில் உள்ள ஸ்ரீ சிவா-விஷ்ணு கோவில், தைப் பொங்கல் திருவிழாவின் போது சேதப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.