வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை: கனடா அறிவிப்பு
வெளிநாட்டு மக்கள் கனடாவில் சொத்து வாங்குவதற்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. கனடாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் நிரந்தர கனடா வாசிகளுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. சொத்து விலை உயர்வை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே கனடாவில் வீட்டு விலைகள் உயர்ந்துள்ளன. மக்கள் வீட்டில் வசிப்பதற்காக வாங்காமல் முதலீடு செய்வதற்காக வாங்குவதால் கூட இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குறைந்துவரும் வீட்டு விலைகள்!
CNN இன் அறிக்கையின்படி, கனடாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள், நிரந்தர கனடா வாசிகள் போன்ற குடிமக்கள் அல்லாதவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. இலாபம் ஈட்டுபவர்கள், பணக்கார நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கனடாவில் இருக்கும் வீடுகளை விரும்பி வாங்குகின்றனர் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சியின் பிரச்சார தளம் கடந்த ஆண்டில் கூறியிருந்தது. ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வரும் முன்பே வீட்டு விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால், 2020, 2021ஆம் ஆண்டுகளை விட 2022ஆம் ஆண்டில் வீட்டு விலைகள் 13 சதவீதம் குறைந்திருக்கிறது.