பாண்டி பீச் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் 'துப்பாக்கி மீட்பு' திட்டத்தை அறிவித்தார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். ஹனுக்கா (Hanukkah) பண்டிகையின் போது, தந்தை மற்றும் மகனால் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவருக்கு சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி உரிமம் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்துப் பேசிய பிரதமர், "ஆபத்தான ஆயுதங்கள் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதை அரசு இனியும் அனுமதிக்காது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அறிவிப்புகள்
முக்கிய அதிரடி மாற்றங்கள்
1. துப்பாக்கி மீட்புத் திட்டம்(Gun Buyback Scheme): பொதுமக்களிடம் உள்ள ஆபத்தான துப்பாக்கிகளை அரசாங்கமே பணம் கொடுத்து திரும்பப் பெற்று, அவற்றை அழிக்கும் மிகப்பெரிய திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார். 1996-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மீண்டும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 2. உரிமக் கட்டுப்பாடுகள்: இனி ஆஸ்திரேலியக் குடிமக்கள் மட்டுமே துப்பாக்கி உரிமம் பெற தகுதியுடையவர்கள். ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கைக்கு கடும் உச்சவரம்பு விதிக்கப்பட உள்ளது. துப்பாக்கி உரிமம் பெற்றவர்களின் மனநிலை மற்றும் பின்னணி குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஒருமுறை பெறப்படும் துப்பாக்கி உரிமம் வாழ்நாள் முழுவதும் செல்லாது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பிக்க வேண்டும், தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.