சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன்
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று(ஜூன் 19) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் நேற்று சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த நிலையில், இன்று சீன அதிபரையும் சந்திருக்கிறார். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் நட்பு நாடான தைவானை கைப்பற்ற சீனா முயற்சித்து வருகிறது. மேலும் சமீபத்தில், தங்கள் எல்லைக்குள் சீனாவின் உளவு பலூன்கள் வந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது.
சில குறிப்பிட்ட பிரச்சனைகளை பேசி தீர்த்திருக்கிறோம்: ஜி ஜின்பிங்
இது தவிர ஹாங்காங் மற்றும் உய்குர் மக்களை கையாள்வதில் சீனா, மனித உரிமை மீறல் செய்து வருவதாக அமெரிக்கா பலமுறை குற்றம்சாட்டி இருக்கிறது. இதனால், அணு ஆயுதங்களை கையாளும் இரு பெரும் நாடுகளிடையே பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில், பிளிங்கன் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்திருக்கிறார். இது பிளிங்கன் மேற்கொண்ட பயணத்தின் வெற்றியாக பார்க்கப்பட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளில் உறுதியான முன்னேற்றம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. "இரு தரப்பு உறவும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. சில குறிப்பிட்ட பிரச்சனைகளை பேசி தீர்த்திருக்கிறோம்." என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு வார்த்தைக்கு பிறகு கூறி இருக்கிறார். ஆனால், அவர்கள் எது குறித்து பேசினார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.