வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், அத்தோடு வட கொரிய தலைவரின் ஆட்சி தகர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலின் அரசு முறை பயணத்தின் போது, அமெரிக்க வெள்ளை மாளிகையில் வைத்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். அதன் பிறகு, அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். தென் கொரியா அல்லது அமெரிக்கா மீது வட கொரியா அணு ஆயுத தாக்குதலை நடத்தினால், அதன் முடிவு பேரழிவாக தான் இருக்கும் என்று அமெரிக்க அதிபர் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென் கொரியா இனி தனிப்பட்ட அணு ஆயுதங்களை தயாரிக்காது
"அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக வடகொரியா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்... தாக்குதல் நடத்த நினைத்தவர்களின் ஆட்சி முடிவுக்கு வரும்." என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. வட கொரியா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அமெரிக்க அணு ஆயுதங்கள் உட்பட கூட்டணியின் முழு பலத்தையும் பயன்படுத்தி வட கொரியா தாக்கப்படும் என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, தென் கொரியா இனி தனிப்பட்ட அணு ஆயுதங்களை தயாரிக்காது. வடகொரியா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.