லத்தீன் அமெரிக்கா மீது பறக்கும் பலூன் சீனாவுடையது தான்: பெய்ஜிங்
லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்து கொண்டிருக்கும் "வேவு" பலூன் சீனாவுடையது தான் என்பதை பெய்ஜிங் இன்று(பிப் 6) உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மீது பறந்து திரிந்த இதே போன்ற ஒரு பலூனை அமெரிக்க விமானப்படையினர் சனிக்கிழமை அன்று சுட்டு வீழ்த்தினர். வழிதவறி அந்த ஆளில்லா வானிலை விமானம் வந்து விட்டதாக சீனா கடந்த வாரம் கூறி இருந்தது. அதையும் மீறி அமெரிக்கா அதை சுட்டு வீழ்த்தியதால், சீனா அதிருப்தியை தெரிவித்திருந்தது. அதே போன்ற இன்னொரு பலூன் லத்தீன் அமெரிக்காவிலும் பறந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பென்டகன் இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இந்த பலூனும் சீனாவுடையது தான் என்பதை சீனா தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
பெய்ஜிங் செல்ல இருந்த திட்டத்தை ரத்து செய்த வெளியுறவுத்துறை செயலாளர்
இந்த பறக்கும் பலூனால் அமெரிக்காவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், பெய்ஜிங் செல்ல இருந்த வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தனது பயணத்தை ரத்து செய்தார். அமெரிக்க மற்றும் கொலம்பிய அதிகாரிகளால் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்து கொண்டிருக்கும் பலூனும் சீனாவுடையது தான் என்பதை தெளிவுபடுத்திய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "அதை கட்டுப்படுத்தும் திறன் குறைவாக இருப்பதாலும், வானிலை மாற்றங்களாலும் அது வழிதவறி லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் வான்வெளியில் நுழைந்துவிட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.