LOADING...
டிரம்ப் ஆவணப்பட சர்ச்சையால் பிபிசி தலைமை இயக்குநர், செய்தி தலைமை அதிகாரி ராஜினாமா
பிபிசி தலைமை இயக்குநர், செய்தி தலைமை அதிகாரி ராஜினாமா

டிரம்ப் ஆவணப்பட சர்ச்சையால் பிபிசி தலைமை இயக்குநர், செய்தி தலைமை அதிகாரி ராஜினாமா

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2025
07:53 am

செய்தி முன்னோட்டம்

BBC தலைமை இயக்குநர் டிம் டேவி மற்றும் பிபிசி செய்தி பிரிவின் தலைமை செயல் அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான ஆவணப்படத்தில், அவரது உரையை எடிட் செய்து தவறாக சித்தரித்ததாக எழுந்த சர்ச்சையே இந்த அதிரடி முடிவுக்கு காரணமாகும். கடந்த 2021 ஜனவரி 6 அன்று டிரம்ப் நிகழ்த்திய உரையை எடிட் செய்ததாக கூறப்படுகிறது.

விவரங்கள்

சர்ச்சையின் விவரங்கள்

ஜனவரி 6, 2021 அன்று கேபிடல் மீதான தாக்குதலுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையின் சில பகுதிகளை, பிபிசி-யின் புலனாய்வு நிகழ்ச்சியான 'பனோரமா' (Panorama) வேண்டுமென்றே திருத்தம் செய்து, போராட்டக்காரர்களை ஊக்குவிப்பது போல காட்டியதாகப் புகார் எழுந்தது. "போராடுங்கள்" (fight like hell) போன்ற ட்ரம்ப்பின் பேச்சின் பகுதிகளை இணைத்து, அவர் கலவரக்காரர்களை தூண்டினார் என ஆவணப்படம் சித்தரித்ததாக 'தி டெலிகிராஃப்' (The Telegraph) நாளிதழ் வெளியிட்ட விசில்ப்ளோவர் மெமோ மூலம் தெரியவந்தது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் திருநங்கைகள் பிரச்சினைகள் போன்ற பல விவகாரங்களில் பிபிசி நடுநிலைமை தவறிவிட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த சூழலில் இந்த ராஜினாமாக்கள் நிகழ்ந்துள்ளன.

விளக்கம்

BBC தலைவர்களின் விளக்கம்

டிம் டேவி தனது ராஜினாமாவை 'தனிப்பட்ட முடிவு' என்று குறிப்பிட்டாலும், இந்தச் சமீபத்திய சர்ச்சை ஒரு காரணியாக இருந்ததாகவும், அதற்குத் தானே பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார். டெபோரா டர்னஸ், தவறுகள் நிகழ்ந்திருப்பதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், பிபிசி செய்திகள் அமைப்பு ரீதியாக பாரபட்சமாகச் செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய 'தி டெலிகிராஃப்' நாளிதழுக்கு ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் நன்றி தெரிவித்த ட்ரம்ப், தனது உரையை 'திரித்துக் காட்டிய' ஊடகவியலாளர்கள் பிபிசி தலைமையிலிருந்து பதவி விலகியதைக் கொண்டாடினார்.