ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்த வங்காளதேசம்
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், ஷேக் ஹசீனா உட்பட அவரின் அரசில் பதவியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.க்கள்) வழங்கப்பட்ட அனைத்து டிப்ளமேடிக் பாஸ்போர்ட்களையும் ரத்து செய்துள்ளது. சில நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்வது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட், ஹசீனா பிரதமராக இருந்த காலத்தில் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டன. ஆகஸ்ட் 6 அன்று, நாட்டில் நிலவிய கொந்தளிப்பான சூழலுக்கு இடையில், வங்காளதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அரசாங்க பணிகளில் உள்ள இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஜூலையில் தொடங்கிய மாணவர் போராட்டம் - விரைவில் பரந்த அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்தது. நாடு தழுவிய வன்முறையில் 230க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என அழுத்தம்
ஷேக் ஹசீனா இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருப்பது இராஜதந்திர சவால்களுக்கு வழிவகுக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பங்களாதேஷ்-இன் இடைக்கால அரசு அவர் திரும்புவதற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும், பங்களாதேஷ் இன்னும் அதிகாரபூர்வ ஒப்படைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும், அவர்கள் அவ்வாறு செய்தாலும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை இந்தியாவுக்கு இல்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமீபத்தில், பங்களாதேஷின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி, கொலை மற்றும் மாணவர் தலைமையிலான எழுச்சி தொடர்பான பிற குற்றச்சாட்டுகளுக்காக ஹசீனாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்க்கட்சியான பிஎன்பி இந்தியாவிடம் கோரிக்கை
போராட்டங்களை அடக்குவதற்கு பலத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஹசீனா, 31 வழக்குகளை எதிர்கொள்கிறார். இதில் 26 கொலை, நான்கு மனிதகுலம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஒரு கடத்தல் வழக்குகள் உள்ளன. பிஎன்பி பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், ஹசீனாவை சட்டப்பூர்வமாக வங்காளதேச அரசிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார். "சட்டப்பூர்வமான வழியில் அவரை வங்காளதேச அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே உங்களுக்கு எங்களின் அழைப்பு" என்றார்.