டெல்லி க்ரைம்: தடயவியல் அறிவைப் பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி
செய்தி முன்னோட்டம்
டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி போலீசார் முடித்து வைத்துள்ளனர். ஆரம்பத்தில் இது ஒரு A.C வெடிப்பு அல்லது விபத்து என்று கருதப்பட்டாலும், இது ஒரு கொடூரமான சதி மற்றும் பழிவாங்கல் நடவடிக்கை என போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ராம்கேஷின் 21 வயது லிவ்-இன் பார்ட்னரான அமிர்தா சவுகான், அவரது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் (27), மற்றும் நண்பர் சந்தீப் குமார் (29) தான் கொலையாளிகள் என கண்டுபிடித்துள்ளனர்.
பின்னணி
வெளியான வழக்கின் அதிர்ச்சி பின்னணி
அமிர்தா சவுகான், பி.எஸ்சி. தடயவியல் அறிவியல் (B.Sc. Forensic Science) படிக்கும் மாணவி ஆவார். தன்னுடைய தனிப்பட்ட வீடியோக்களை ராம்கேஷ் ரகசியமாக பதிவு செய்ததை அவர் கண்டுபிடித்துள்ளார். வீடியோக்களை நீக்க ராம்கேஷ் மறுத்ததால், கோபமடைந்த அமிர்தா, தன் முன்னாள் காதலன் சுமித்தின் உதவியுடன் அவரை கொல்ல திட்டமிட்டார். கடந்த அக்டோபர் 5 அன்று இரவு மொராதாபாத்தில் இருந்து டெல்லிக்கு வந்த குற்றவாளிகள் மூவரும் ராம்கேஷின் வீட்டிற்கு சென்று, அவரைத் தாக்கிக் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர், அவர் உடலின் மீது நெய், எண்ணெய் மற்றும் மதுபானம் ஆகியவற்றை ஊற்றி, கேஸ் சிலிண்டர் வால்வை திறந்து தீ வைத்து, கொலையை விபத்தாக மறைக்க முயன்றனர்.
தடயவியல் அறிவு
தடயங்களை மறைக்க தடவியல் அறிவை பயன்படுத்திய அமிர்தா
அமிர்தா தடயவியல் அறிவியல் மாணவியாக இருந்ததாலும், கிரைம் திரில்லர் வெப் சீரீஸ்களில் ஆர்வம் கொண்டதாலும், கொலையை விபத்து போல காட்ட, கேஸ் சிலிண்டர் வெடிப்பை ஏற்படுத்தி ஆதாரங்களை அழிக்கத் திட்டமிட்டார். மேலும், சந்தேகத்தை தவிர்ப்பதற்காக வெளியேறும் முன் கதவை உள்ளிருந்து பூட்டிவிட்டு, இரும்புக் கதவில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக வெளியேறியுள்ளனர். தடயங்களை அழிக்க ராம்கேஷின் ஹார்ட் டிஸ்க், லேப்டாப்கள் மற்றும் பிற பொருட்களையும் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகம் வலுத்ததால் அமிர்தாவை பிடித்து விசாரித்த போலீசாரிடம், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்ற இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை.