LOADING...
இன்று வங்கிகள் இயங்காது: 5 நாள் வேலை கேட்டு வங்கி ஊழியர்கள் அதிரடி ஸ்டிரைக்
5 நாள் வேலை கேட்டு வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்

இன்று வங்கிகள் இயங்காது: 5 நாள் வேலை கேட்டு வங்கி ஊழியர்கள் அதிரடி ஸ்டிரைக்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 27, 2026
08:54 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஜனவரி 27, 2026) நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வங்கிச் சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 'ஐந்து நாள் வேலை வார' (5-day work week) முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் முதன்மைக் கோரிக்கை. தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

பாதிப்புகள்

முக்கிய வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது

இந்த வேலைநிறுத்தம் காரணமாக காசோலை பரிமாற்றம் (Cheque Clearance), பணம் டெபாசிட் செய்தல் மற்றும் எடுத்தல் போன்ற வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், ஏடிஎம் (ATM) சேவைகள் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் (Net Banking/UPI) வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளில் பெரும்பாலானவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்காததால் அங்குச் சேவைகள் பாதிக்கப்படவில்லை. வங்கி ஊழியர்களின் இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், வங்கி வேலை நேரம் தினசரி 40 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்த இறுதி முடிவை மத்திய நிதி அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாகும்.

Advertisement