வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்: ஒரு சகாப்தம் முடிவு
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான 'வங்கதேச தேசியக் கட்சியின்' (BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை காலமானார். கடந்த நவம்பர் 23-ம் தேதி முதல் டாக்காவிலுள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 80 வயதான கலீதா, கல்லீரல் பாதிப்பு (Cirrhosis), மூட்டுவலி, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு நோய்களால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த டிசம்பர் 11-ம் தேதி முதல் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.
அரசியல் பயணம்
தேசத்தின் முதல் பெண் பிரதமராக கலீதாவின் பயணம்
வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான இவர், தனது கணவரின் மறைவுக்குப் பின் அரசியலில் நுழைந்தார். 1991 முதல் 1996 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2006 வரையிலும் என மூன்று முறை நாட்டின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். வங்கதேச அரசியலில் ஒரு பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த காலேதா ஜியாவின் மறைவு, அந்நாட்டு அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கட்சி
கலீதாவின் மறைவு குறித்து கட்சியின் அறிக்கை
முன்னாள் பிரதமர் கலீதா இன்று காலை 6 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக பிஎன்பி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. "திங்கட்கிழமை இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மேலதிக சிகிச்சைக்காக லண்டனுக்கு அவரை அழைத்துச் செல்ல கத்தாரில் இருந்து ஒரு சிறப்பு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது, ஆனால் எவர்கேர் மருத்துவமனையில் இருந்து டாக்கா விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கு மருத்துவ வாரியம் அனுமதி வழங்கவில்லை," என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு முன்னதாக, 17 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட பிறகு கடந்த வாரம் டாக்கா திரும்பிய அவரது மகன் தாரிக் ரஹ்மான், தேர்தலில் முன்னணியில் இருப்பதாக பரவலாகப் பார்க்கப்படுகிறது.