ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டியது இந்தியாவின் கடமை; பங்களாதேஷ் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ், இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த மாணவர் கிளர்ச்சி மீதான வன்முறைத் தாக்குதலில் இவர்களுக்குப் பங்கு இருப்பதாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்ததை அடுத்து, பங்களாதேஷ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இருதரப்பு நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ், ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது என்று பங்களாதேஷ் திங்களன்று (நவம்பர் 17) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு போராட்டங்களின்போது டாக்காவிலிருந்து தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா, ஆகஸ்ட் 2024 முதல் இந்தியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
வலியுறுத்தல்
இந்தியாவுக்கு பங்களாதேஷ் வலியுறுத்தல்
முன்னாள் பிரதமர் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களுக்கான குற்றவாளி என்று தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிக்கும் எந்த நாடும் நீதிக்கு ஒரு அவமதிப்பு செய்யும் நட்பற்ற நாடாகக் கருதப்படும் என்றும் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும், தற்போதைய ஒப்பந்தத்தின்படி நாடு கடத்துவது கட்டாயக் கடமை என்றும் குறிப்பிட்டு, இரண்டு குற்றவாளிகளையும் உடனடியாக பங்களாதேஷ் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பை கவனத்தில் கொண்டதாக இந்தியா சில மணி நேரங்களுக்குப் பிறகு பதிலளித்தது. இருப்பினும், இந்தியா தனது அறிக்கையில் நாடு கடத்தல் கோரிக்கை குறித்து நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.