ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!
மியான்மர் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனையை 33ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தேகப்பட்ட ஆங் சான் சூகி அரசின் ஆட்சி பிப்ரவரி 2021இல் கவிழ்க்கப்பட்டது. தற்போது, அவரது ஆட்சியை அகற்றிய ராணுவத்தினர் மியான்மரை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து, ஆங் சான் சூகியின் மீது 19 வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இந்த குற்றசாட்டுகள் எல்லாம் போலியானது என்று உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய கோரியது.
77 வயதாகும் முன்னாள் தலைவருக்கு 33 ஆண்டுகள் சிறை!
இன்று(டிச:30) ஆங் சான் சூகியின் மீது சுமத்தப்பட்ட கடைசி 5 வழக்குகளின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், அரசாங்க அமைச்சருக்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கும் போது அவர் விதிமுறைகளை பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுமத்தப்பட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளார். நோபல் அமைதி பரிசு வென்ற 77 வயது ஆங் சான் சூகியை ராணுவ அரசு வீட்டு காவலில் வைத்திருக்கிறது. தற்போது, அவரது விசாரணைகள் எல்லாம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்படுகிறது. விசாரணை அறைக்குள் ஊடகங்கள் உட்பட யாருக்கும் அனுமதி கிடையாது. அவரது வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆங் சான் சூகி மறுத்துள்ளார்.