ட்ரம்ப் உயிரைக் குறிவைத்த சதியா? அதிபரின் கோல்ஃப் மைதானம் அருகே ஆயுதங்களுடன் நபர் கைது!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ளவிருந்த நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு இரு நாட்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில் உள்ள அவரது 'ட்ரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்' அருகே ஆயுதங்களுடன் ஜினின் ஜான் டேலே கைது செய்யப்பட்டார். அவர் ட்ரம்ப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நோட்டம் விட்டு படம்பிடித்ததோடு, 16 தோட்டாக்கள் கொண்ட மேகசினும், காரில் இருந்து லோட் செய்யப்பட்ட கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே ட்ரம்ப் மீது தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்தை எஃப்.பி.ஐ மற்றும் ரகசியக் காவல் படை ட்ரம்பிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதித் தீவிரமாக விசாரித்து வருகின்றன.
தீவிர விசாரணை
வீட்டில் எஃப்.பி.ஐ. நடத்திய அதிரடிச் சோதனை
டவுனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் அமெரிக்க நீதித் துறை மற்றும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கிகள், புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நோட்டுப் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.
ஏற்கனவே கொள்ளை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரான இவர் மீது சட்டவிரோத ஆயுதப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்சமயம் பெருமளவு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ள லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை, எஃப்.பி.ஐ. அமைப்போடு இணைந்து வழக்கை ஹாட்-டிராக்கிங் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது