மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்: 33 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்
மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகி உள்ளது. ஒரே வாரத்திற்குள் துருக்கியில் ஏற்படும் 6வது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். சமீபத்திய நிலநடுக்கம் தெற்கு நகரமான கஹ்ராமன்மாராஸில் மையம் கொண்டிருந்தது. இதே நகரத்தில் தான் ஒரு வாரத்திற்கு முன் 7.8 ரிக்டர் அளவை கொண்ட முதல் நிலநடுக்கமும் ஏற்பட்டிருந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது புதிதல்ல . 1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர்.
வானிலையால் பாதிக்கப்படும் மீட்பு பணிகள்
1939இல் 33,000 பேரைக் கொன்ற எர்சின்கானின் நிலநடுக்கத்தை அடுத்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்படும் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் பெரிய பூகம்பங்களால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் அகதிகள் என்று கூறப்படுகிறது. தற்போது, அதிக குளிர், மழை மற்றும் பனியால் அங்கு மீட்பு பணிகள் பெரிதும் பாதியாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதனால், தங்கள் வீடுகளை இழந்த மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் குறைந்தது 29,605 பேரும், சிரியாவில் 3,500 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆனால், சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களாக புதுப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.