LOADING...
மெக்சிகோ காடுகளுக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த மாயன் நாகரிக நகரம் கண்டுபிடிப்பு
மெக்சிகோவில் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த மாயன் நாகரிக நகரம் கண்டுபிடிப்பு

மெக்சிகோ காடுகளுக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த மாயன் நாகரிக நகரம் கண்டுபிடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 25, 2026
07:40 pm

செய்தி முன்னோட்டம்

தெற்கு மெக்சிகோவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகிற்குத் தெரியாமல் முற்றிலும் சிதையாத நிலையில் மறைந்திருந்த பிரம்மாண்ட மாயன் நாகரிக நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர். சமீபத்திய உலகத் தொல்லியல் வரலாற்றிலேயே மிக முக்கியக் கண்டுபிடிப்பாகக் கருதப்படும் இந்த நகரம், மெக்சிகோவின் கேம்பாச்சே மாநிலத்தில் உள்ள கலாமுல் பல்லுயிர் பெருக்கக் காப்பகத்தின் மிகத் தொலைதூரப் பகுதியில் புதைந்துள்ளது. இந்த வரலாற்றுப் பழங்கால இடத்திற்கு மாயன் மொழியில் "பாதை இல்லாத இடம்" என்று பொருள்படும் 'மினான்பே' என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

அடர்ந்த காடு

5 கிலோமீட்டர் அடர்ந்த காட்டை வெட்டிச் சென்ற ஆராய்ச்சியாளர்கள்

ஸ்லோவேனிய அறிவியல் மற்றும் கலை அகாடமியின் முன்னணி தொல்லியல் அறிஞர் இவான் ஸ்ப்ராஜ்க் தலைமையிலான மெக்சிகோ-ஸ்லோவேனிய கூட்டு ஆராய்ச்சி குழுவினர், கடந்த மூன்று தசாப்தங்களாக மத்திய மாயன் தாழ்நிலப் பகுதிகளில் மேற்கொண்டு வந்த தொடர் ஆராய்ச்சியின் உச்சகட்டமாக இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். நவீன லிடார் எனப்படும் லேசர் தொழில்நுட்பம் மூலம் வான்வழியாகக் காடுகளுக்குக் கீழே ஸ்கேன் செய்த போதுதான் 15 ஹெக்டேர் பரப்பளவில் இந்த நகரம் புதைந்திருப்பது முதன்முதலில் தெரியவந்தது. இதன் பின்னர், தொல்லியலாளர்கள் அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளுக்குள் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மரங்களை வெட்டிப் பாதை அமைத்து, ஆல்-டெரெய்ன் வாகனங்கள் மூலம் மிகக் கடினமான பயணத்திற்குப் பின் இந்த இடத்தை நேரில் அடைந்தனர்.

நகர கட்டமைப்பு

4 அடுக்கு மாடி உயர பிரமிடும் அசாத்திய நகரக் கட்டமைப்பும்

மெக்சிகோவின் தேசிய மானிடவியல் மற்றும் வரலாற்று நிறுவனம் அனுமதித்த இந்தத் தேடுதலில், காட்டின் மரங்களுக்கு நடுவே 43 அடி உயரமுள்ள (சுமார் 4 அடுக்கு மாடி குடியிருப்பு உயரம்) பிரம்மாண்ட பிரமிடு ஆலயம் ஒன்றை குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த நகரத்தில் 14 செதுக்கப்பட்ட பலிபீடங்கள், நினைவுத் தூண்கள், பிரம்மாண்ட அரண்மனைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் சூழ்ந்த பொது சதுக்கங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இந்த நகரம் மிகச் சிறந்த நகரத் திட்டமிடலுடன் கட்டப்பட்டதற்கான சான்றாக, அங்குப் பரந்து விரிந்து கிடக்கும் நீர் மேலாண்மை அமைப்புகள், ஈரநிலங்கள் மற்றும் நீரியல் கால்வாய்கள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

கிபி 600-900

கிபி 600-900 இல் செழித்தோங்கிய கிளாசிக் காலத்து மினான்பே

இந்த மினான்பே நகரம் கிபி 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான புகழ்பெற்ற ரியோ பெக் கட்டிடக்கலை பாணியைக் கொண்டுள்ளதாகத் தொல்லியலாளர் விட்டன் வுஜனோவிக் உறுதிப்படுத்தியுள்ளார். லேட் கிளாசிக் காலத்தில் (கிபி 600-900) மில்லியன் கணக்கான மக்கள் வாழ்ந்த மாயன் தாழ்நிலப் பகுதியில், இந்த நகரம் பிராந்திய விவசாயம் மற்றும் வர்த்தகப் போக்குவரத்தின் மையப் புள்ளியாக விளங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நகரில் கொள்ளையர்களின் நடமாட்டமோ அல்லது காடழிப்புப் பணிகளோ இதுவரை நடக்காததால், மாயன் நாகரிகத்தின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் மக்களின் வாழ்வியல் மாற்றங்களை இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ள இந்த மினான்பே கண்டுபிடிப்பு ஒரு புதிய வாய்ப்பைத் திறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement