அமேசான் நிறுவனத்தின் மீது இரண்டு வழக்குகள்.. ஏன்?
அமெரிக்க அரசின் வர்த்தக ஆணையமானது அமேசான் நிறுவனத்தின் மீது தனியுரிமை மீறல் காரணமாக இரண்டு வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறது. இணைய வர்த்தகம் மட்டுமல்லாமல் பல்வேறு மின்னணு சாதனங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது அமேசான். அந்நிறுவனத்தின், கிளவுடை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அலெக்ஸா சேவையானது எப்போதும் பயனர்களின் தனியுரிமைக்கு ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அந்நிறுவனமானது குழைந்தைகளுக்கான இணைய தனியுரிமைக் பாதுகாப்பு சட்டத்தை மீறியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது அமெரிக்க வர்த்தக ஆணையம். குழந்தைகள் அலெக்ஸாவுடன் உரையாடிய தகவல்களை 2019-ல் இருந்து சேகரித்து வந்தது மட்டுமல்லால், இப்போதும் அதனை தங்களது டேட்டா சென்டரில் வைத்திருப்பதாக அமேசான் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இதனை அந்நிறுவனம் மறுத்தாலும், இந்த வழக்கை முடிப்பதற்காக $25 மில்லியன்களை வழங்கயிருக்கிறது அமேசான்.
அமேசான் ரிங்:
அமேசானின் மற்றொரு மின்னணு சாதன துணை நிறுவனம் ரிங். வாடிக்கையாளர்களின் வீடுகளில் வீடியோ கண்காணிப்பிற்கான மின்னணு சாதனத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இந்த சாதனத்தின் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்களை ரிங் நிறுவன ஊழியர்களும், அந்நிறுவனத்தின் மூன்றாம் தர ஒப்பந்ததாரர்களும் தங்களுடய பயன்பாட்டிற்கு பயன்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது அமெரிக்க வர்த்தக ஆணையம். அந்த வீடியோ தகவல்கள் ரிங் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு தேவையில்லாத நிலையில், அந்தத் தரவுகளுக்கான அனுமதியைக் கொண்டிருக்கிறது ரிங். இந்த வழக்கை முடிக்க $5.8 மில்லியன்களை வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறது ரிங் நிறுவனம்.