அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பெருநகரப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை 8:11 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 69 கி.மீ ஆழத்தில் இந்த நடுக்கம் ஏற்பட்டது. இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகளோ அல்லது பெரிய சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஆங்கரேஜுக்கு வடமேற்கே சுமார் 108 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சுசித்னாவில் இருந்து 12 கிமீ தொலைவில் இருந்தது என்று USGS தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்-மத்திய அலாஸ்காவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும். நடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி அபாயம் இல்லை என்று உறுதிப்படுத்தியது.
இந்தோனேசியா
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம்
உலகளவில் அதிக நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் அலாஸ்கா முக்கியமானதாகும். இங்கு ஆண்டுக்கு ஒரு முறை சராசரியாக 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று USGS தரவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்னதாக, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.4 ரிக்டர் அளவில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அச்சே மாகாணத்திற்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் மையப்புள்ளி பதிவானது. அதே சமயம், வட சுமத்ரா மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கிச் சமீபத்தில் குறைந்தது 23 பேர் பலியாகினர். பலத்த மழை காரணமாக ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி, கிராமங்களில் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.