ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இரு நாடுகளுக்குமிடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா முஜாஹித் கூறுகையில், பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆப்கானிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியதாலேயே பேச்சுவார்த்தைகள் முறிந்தன என்றும், அது ஆப்கானிஸ்தானின் திறனுக்கு அப்பாற்பட்டது என்றும் விவரித்தார். "தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்தத்தை நாங்கள் மீறவில்லை, அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்" என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பேச்சு
எல்லையில் மீண்டும் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க இஸ்தான்புல்லில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிஃப் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து தாக்குதல்கள் எதுவும் நிகழாதவரை போர் நிறுத்தம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை முறிவுக்கு ஒரு நாள் முன்னதாக, இரு நாட்டுப் படைகளும் எல்லையில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பிற்கும் இடையேயான பதற்றம் சமீப மாதங்களில் அதிகரித்துள்ளது. தாலிபான்கள் 2021 இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மிக மோசமான வன்முறையாக, கடந்த மாதம் நடந்த மோதல்களில் டஜன்கணக்கானோர் உயிரிழந்தனர்.