
ஆப்கானிஸ்தான் மண்ணின் துணிச்சலை சோதிக்க வேண்டாம்: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த தலிபான் அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானின் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் முத்தாகி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கூர்மையான எச்சரிக்கையை விடுத்தார். காபூலில் உள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்திய சமீபத்திய சம்பவங்களுக்கு பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவதால் தங்கள் பொறுமை "தீர்ந்துவிட்டது" என்று அந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் கூறியது.
கருத்து
"ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக்கூடாது"
"ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக்கூடாது. யாராவது இதை செய்ய விரும்பினால், அவர்கள் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் கேட்க வேண்டும். ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது நல்லதல்ல என்பதை அவர்கள் விளக்க முடியும்," என்று அவர் கூறினார். மேலும், இந்த அணுகுமுறையால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும், பாகிஸ்தான் எல்லை தாண்டிய நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தான் கண்டிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முக்கிய முடிவுகள்
இந்தியாவுடன் உயர்மட்ட சந்திப்பு மற்றும் முக்கிய முடிவுகள்
வெள்ளிக்கிழமை, முத்தாகி இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடன் ஒரு உயர்மட்ட சந்திப்பை நடத்தினார். "ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை எந்த நாட்டிற்கும் எதிராகப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று முத்தாகி இந்தியாவுக்கு உறுதியளித்தார். இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் தொடர்பில் இருப்பார்கள் என்றும் கூறினார். இது, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மறைமுகமான செய்தியாக கருதப்பட்டது. ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, காபூலில் உள்ள இந்தியாவின்தொழில்நுட்ப தூதரகத்தை முழு தூதரகமாகத் தரம் உயர்த்தி மேம்படுத்துவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார். இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களைத் தொடரவும், விரிவுபடுத்தவும் எடுத்த முடிவை முத்தாகி வரவேற்றார். இருதரப்பு வர்த்தகத்திற்கான தடைகளை நீக்க ஒரு கூட்டு வர்த்தகக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.