Loading...
லண்டன் வீதியில் போதையில் கிடந்த அபுதாபி இளவரசிக்கு குழந்தை பாதுகாப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு என்ன?

லண்டன் வீதியில் போதையில் கிடந்த அபுதாபி இளவரசிக்கு குழந்தை பாதுகாப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2026
12:09 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பரபரப்பான வீதியில் போதையில் மயங்கி விழுந்த அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு குழந்தை பராமரிப்பு பாதுகாப்பு தவறிய குற்றத்திற்காக நீதிமன்றம் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வெஸ்ட் லண்டன் பகுதியில் உள்ள பிஸியான சாலையில் அபுதாபி அரச குடும்ப பெண்ணான 32 வயது மஹ்ரா அல் நஹ்யான் என்பவர் காலில் செருப்புமின்றி, உலோகத் தடுப்புகளின் மீது சாய்ந்தபடி மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் மற்றொரு ஆணும் மயங்கிக் கிடந்துள்ளார்.

பின்னணி

போதையில் தாய், தெருவில் தவித்த குழந்தை

அவர்களுடன் இருந்த 3 வயது சிறுவன், காலில் காலணி அணியாமல் இயங்கும் வாகனங்களுக்கு மிக அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களில் ஒருவர், குழந்தை சாலையில் காகித துண்டு ஒன்றைத் துரத்திச் சென்று ஆபத்தான முறையில் ஓடியதை அடுத்துத் தடுத்து நிறுத்திவிட்டுப் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மஹ்ரா அல் நஹ்யான் போதையின் உச்சத்தில் இருந்ததால் சுமார் 30 நிமிடங்கள் காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவித்துள்ளார்.

பின்னர் சுயநினைவுக்கு வந்த அவர், காவல்துறையினரை நோக்கி கத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தண்டனை

நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்கள்

சவுத்வர்க் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, இச்சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு கோகைன் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மஹ்ரா அல் நஹ்யான், குழந்தையைப் பராமரிக்க தவறிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நீதிபதி அவருக்கு இரண்டு ஆண்டுகள் சமூக சேவை உத்தரவு மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகளை வழங்கினார். மேலும், £5,000 அபராதமும், வழக்குச் செலவுக்காக £1,000 செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹ்ரா அல் நஹ்யான், ஐக்கிய அரபு நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சைத் அல் நஹ்யான் குடும்பத்துடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது தவறுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள அவர், மறுவாழ்வு மையத்தில் மூன்று மாத கால புத்துணர்வுப் பயிற்சியை முடிக்க உள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ADVERTISEMENT