LOADING...
யார் இந்த அபய் குமார் சிங்? இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்தக் குரல் கொடுக்கும் பீகாரில் பிறந்த ரஷ்ய எம்எல்ஏ

யார் இந்த அபய் குமார் சிங்? இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்தக் குரல் கொடுக்கும் பீகாரில் பிறந்த ரஷ்ய எம்எல்ஏ

எழுதியவர் Sekar Chinnappan
Dec 04, 2025
02:35 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் அபய் குமார் சிங், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா, ரஷ்யாவின் அதிநவீன எஸ்-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அபய் குமார் சிங் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர். அவர் 1991 இல் மருத்துவம் படிக்க அப்போதைய சோவியத் யூனியனுக்கு (USSR) குடிபெயர்ந்தார். ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் வசித்து வரும் இவர், புடின் தலைமையிலான ஐக்கிய ரஷ்யா கட்சி உறுப்பினராக உள்ளார். இவர் 2017 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை குர்ஸ்க் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உறவு

இந்தியா-ரஷ்ய உறவு குறித்து அபய் குமார் சிங் கருத்து

விளாடிமிர் புடின் ஒரு வலிமையான ரஷ்யாவை உருவாக்கியுள்ளதாக நம்பும் அபய் குமார் சிங், இந்தியாவுடனான உறவு குறித்து கூறுகையில், "ரஷ்யாவில் இருந்து ஒரு பெரிய குழு அதிபருடன் இந்தியாவுக்கு வருகிறது. சுகாதாரம் மற்றும் ஆயுதங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தொழில்நுட்பங்கள் முன்னேறி வருகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட எஸ்-500 போன்ற ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்காக ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். கடந்த 70-80 ஆண்டுகளாக இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் எந்த மோதலும் இல்லை என்றும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement