'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள்
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே "நிலுவையில் உள்ள பிரச்சனைகளை", குறிப்பாக காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை அந்த இரு நாடுகளும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் சவூதியின் தற்போதைய ஆட்சியாளர் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் ஏப்ரல் 7 ஆம் தேதி மக்காவில் உள்ள அல்-சஃபா அரண்மனையில் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தினர். அதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதர உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதில் அவர்களின் கலந்துரையாடல் நிலை கொண்டிருந்தது. காஷ்மீர் விவகாரம் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இரு நாடுகளுக்கு இடையே நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க, அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்புப் பிரச்சினை என்றும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தலையீடும் அதில் இருக்கக்கூடாது என்பதும் புதுடெல்லியின் நீண்டகால நிலைப்பாடாகும்.