வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்ததாகவும், 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் இருந்ததாகவும், அதன் ஆழம் 180 கிலோமீட்டர் என்பதும் கணக்கிடப்பட்டுள்ளது. லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹாட், லக்கி மார்வாட் மற்றும் பாகிஸ்தானின் பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், கோட் மோமின், மத் ரஞ்சா, சக்வால், கோஹாட் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிகளிலும் வலுவான நடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிப்பு
நிலநடுக்கத்தின் போது, ராவல்பிண்டியின் சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையையும் கையாள விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மத்திய சுகாதார அமைச்சர் அப்துல் காதர் படேலின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய தலைநகர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாததிலும் இஸ்லாமாபாத்தில் 6.3 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நில அதிர்வு மையத்தின்படி, பாகிஸ்தானைத் தவிர, இந்தியா, ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, உத்திர பிரதேசம் உட்பட பல வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.