காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; ஐநா சபை தகவல்
காஸாவில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் கிட்டத்தட்ட 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்தியுள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆறு மாத காலப் போரின் போது பதிவாகிய 34,500 க்கும் மேற்பட்ட இறப்புகளில் 8,119 இறப்புகளை சரிபார்த்துள்ள ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் (OHCHR) அலுவலகத்தால் இந்தத் தரவு தொகுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 44% குழந்தைகள் உள்ளனர் என்றும், ஐந்து முதல் ஒன்பது வயது வரை உள்ளவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது பொதுமக்களின் உயிரிழப்புகளில் இஸ்ரேலின் அலட்சியத்தை விமர்சித்துள்ளது. அறிக்கைக்கு குறித்து பேசியுள்ள ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், இஸ்ரேலின் வெளிப்படையான அலட்சியம் குறித்து கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
ஐநா அறிக்கை பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது
88% சம்பவங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது மக்கள் அடர்த்தியான பகுதிகளில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களின் தவறான எறிகணைகளால் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஐநா சபையின் அறிக்கைகளை இஸ்ரேல் இன்னும் பதிலளிக்கவில்லை. முன்னதாக, அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேலுக்குள் நுழைந்து தெற்கு இஸ்ரேலில் சுமார் 1,200 பேரைக் கொன்றனர் மற்றும் 250க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை கைப்பற்றிய பின்னர் இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதலைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.