7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை
வட-மத்திய ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜப்பானின் வடமேற்கு கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் இருக்கும் இஷிகாவா மற்றும் அதை ஒட்டியுள்ள மாகாணங்களை நிலநடுக்கம் தாக்கியது. அந்த நிலநடுக்கங்களில் ஒன்று 7.4 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகள் தலைநகர் டோக்கியோவிலும், காண்டோ பகுதியிலும் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து இஷிகாவாவில் உள்ள நோட்டோ கடற்கரையை 5 மீட்டர் அலைகள் தாக்கியதால், கடலோரப் பகுதிகளை விட்டு விரைவாக வெளியேறுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதுவரை பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை
நிகாடா மற்றும் டோயாமா உள்ளிட்ட பிற மாகாணங்களில் அலைகள் 3 மீட்டரை எட்டியது. ஆனால், இதுவரை பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில், ஹோக்கிருக்கு மின்சார சக்தி நிலையம் தனது அணுமின் நிலையங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து வருகிறது. டெக்டோனிக் தட்டு இடைவினைகள் அடிக்கடி நிகழும் பசிபிக் நெருப்பு வளையத்தில் ஜப்பான் அமைந்துள்ளதால் , அந்நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிக சாதரணமான விஷயமாகும். மார்ச் 11, 2011 அன்று, ஜப்பானின் ஹோன்ஷு தீவின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஜப்பானின் வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.