பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழையத் தடை!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, ரஷ்யாவின் தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 500 அமெரிக்கர்களை தங்கள் நுழைய தடைவிதித்து அறிவித்திருக்கிறது ரஷ்யா. ரஷ்யா வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் முன்னள் அதிபர் பராக் ஒபாமாவுடன், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் ஸ்டீபன் கோல்பெர்ட், ஜிம்மி கிம்மல், செத் மேயர்ஸ், ரஷ்யாவைக் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் மற்றும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிய நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கிறது. இவர்களைோடு அமெரிக்காவின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் செனட்டர்களின் பெயரையும் தங்களுடைய தடை செய்யப்பட்ட பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறது ரஷ்யா.
அமெரிக்க நிருபரைச் சந்திக்க மீண்டும் அனுமதி மறுப்பு:
ரஷ்யாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் நிருபர் ஒருவரை உளவாளியாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் கடந்த மார்ச் இறுதியில் கைது செய்தது ரஷ்யா. அவரைச் சந்திக்க ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கோரிக்கையை ஏற்கனவே ஒரு முறை நிராகரித்திருந்தது ரஷ்யா. தற்போது தங்களுடைய மேற்கூறிய அறிவிப்பில் மீண்டும் அமெரிக்க தூதரகத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது ரஷ்யா. அமெரிக்காவின் நியூ யார்க்கிற்கு கடந்த மாதம் பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ராவுடன் செல்லவிருந்த பத்திரிகையாளர்களுக்கான விசாவை அமெரிக்கா வழங்கவில்லை. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே கைது செய்யப்பட்ட அமெரிக்க நிருபரைச் சந்திக்கக் கோரிய அமெரிக்க தூரதரகத்தின் அனுமதியையும் நிராகரித்திருக்கிறது ரஷ்யா.