பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி
303 இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி சென்று கொண்டிருந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர். விமானத்தில் இருந்த சில பயணிகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், 303 இந்திய பயணிகள் புகலிடம் எதுவும் இல்லாமல் பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கி கொண்டனர். இந்நிலையில், அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியேற தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அவர்கள் வந்திறங்கிய விமானத்தின் மூலமாகவே அவர்கள் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர். ஆனால், அந்த விமானம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருமா அல்லது அவர்கள் முன்பு திட்டமிட்டபடி நிகரகுவாவுக்கே அழைத்து செல்லப்படுவார்களா என்பது தெரியவில்லை.
இந்திய பயணிகளின் விசாரணை ரத்து
ரோமானிய நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ340 விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்பட்டு கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் ஒரு தொழில்நுட்ப நிறுத்தத்திற்காக கடந்த வியாழக்கிழமை தரையிறங்கியது. பாரிஸிலிருந்து கிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியதும், மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 303 பயணிகள் சென்ற விமானம் தடுத்து வைக்கப்பட்டது. அதில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அந்த விமான பயணிகளின் பயணத்திற்கான நோக்கம் குறித்து ஞாயிற்றுக்கிழமை நான்கு நீதிபதிகள் விசாரணை நடத்தினர். ஆனால், தடுத்து வைக்கும் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததால் 300க்கும் மேற்பட்ட பயணிகளின் விசாரணையை ரத்து செய்ய பிரான்ஸ் நீதிபதிகள் முடிவு செய்தனர்.