அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு
அமெரிக்காவின் வாஷிங்டன் DC பகுதியில் கடுமையான புயல் வீசியதால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன் DCயின் ஒருசில இடங்களில் பலத்த புயல் காற்றுடன்(மணிக்கு 60 மைல் வேகம்) சக்தி வாய்ந்த மழை பெய்ததால், மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று இரவு 9 மணிக்குள்(0100 GMT) கிரேட்டர் DC பகுதியில் சூறாவளி வீசக்கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இதுவரை அந்த பகுதியில் எந்த சூறாவளியும் வீசவில்லை.
கிட்டத்தட்ட 7,900 விமானங்கள் தாமதமானது
இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க், வாஷிங்டன், பிலடெல்பியா, அட்லாண்டா மற்றும் பால்டிமோர் விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் செயல்படாது என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், நேற்று இரவுக்குள், 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 7,900 விமானங்கள் தாமதமானது. வாஷிங்டன் பகுதியில் உள்ள நூலகங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்கா, குளங்கள் மற்றும் பிற நகராட்சி சேவைகள் முன்கூட்டியே மூடப்பட்டன. தென் கரோலினாவின் ஆண்டர்சனில் 15 வயது சிறுவன் ஒருவன், தனது தாத்தா பாட்டி வீட்டுக்கு செல்ல காரில் இருந்து இறங்கியபோது திடீரென்று மரம் சாய்ந்து விழுந்ததால் உயிரிழந்தான். மேலும், அலபாமாவில் உள்ள புளோரன்ஸ் நகரில் 28 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.