LOADING...
2026 டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு; 39 வயது முன்னாள் கேப்டன் மீண்டும் சேர்ப்பு
2026 டி20 உலகக்கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

2026 டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு; 39 வயது முன்னாள் கேப்டன் மீண்டும் சேர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
10:41 am

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 39 வயதான முன்னாள் கேப்டன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் க்ரீமர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜிம்பாப்வே அணியை நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா கேப்டனாக செயல்பட உள்ளார். முக்கிய விவரங்கள் பின்வருமாறு:-

விவரங்கள்

அனுபவம் மற்றும் இளமையின் கலவை

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேசக் கிரிக்கெட்டிற்குத் திரும்பியுள்ள கிரேம் க்ரீமர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். 22 வயதான அதிரடி பேட்டர் பிரையன் பென்னட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்திய போட்டிகளில் இவர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சில் பிளெசிங் முசரபானி மற்றும் ரிச்சர்ட் நகரவா ஆகியோர் அணியின் பலமாக உள்ளனர். அனுபவ வீரர் பிரெண்டன் டெய்லரும் அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2024 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறத் தவறிய ஜிம்பாப்வே, இந்த முறை நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. 'பி' பிரிவில் ஜிம்பாப்வே உடன் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஓமன் கிரிக்கெட் அணிகள் இடம் பெற்றுள்ளன.

அட்டவணை

ஜிம்பாப்வே அணியின் போட்டி அட்டவணை

பிப்ரவரி 9: ஓமன் அணிக்கு எதிராகத் தனது முதல் போட்டியைத் தொடங்குகிறது. பிப்ரவரி 13: ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. பிப்ரவரி 17: அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 19: கடைசியாக இலங்கை அணியுடன் லீக் சுற்றுப் போட்டியில் விளையாடுகிறது. ஜிம்பாப்வே அணி வீரர்கள் பட்டியல்: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட் எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மாபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, டோனி முன்யோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளெசிங் முசரபானி, தியோன் மியர்ஸ், ரிச்சர்ட் நகரவா, பிரெண்டன் டெய்லர்.

Advertisement