ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்; டி20 கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம்
2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் முயற்சியில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில், டி20 போட்டிகளின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. மேலும், தேர்வுக் குழுவையும் மாற்றி அமைத்துள்ளது. ஜிம்பாப்வே சமீபத்தில் நமீபியாவிடம் 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்தது மற்றும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் 2024இல் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் விளையாட உள்ளது. முன்னதாக, 2022 டி20 உலகக்கோப்பையில், சூப்பர் சிக்ஸ் குழுவில் கடைசி இடத்தைப் பிடித்ததால், 2024க்கான போட்டியில் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்குழுவிலும் மாற்றம் செய்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்
டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசாவை நியமித்த நிலையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக கிரெய்க் எர்வின் தொடர்கிறார். ஜிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள டேவ் ஹொட்டனைத் தக்கவைத்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், தேர்வுக்குழுவை மாற்றியுள்ளது. இதன்படி, ஆடவர் அணியின் தேர்வுக் குழுவில் டேவிட் முடந்தேரா கன்வீனராக இருப்பார் மற்றும் ஹொட்டன் மற்றும் எல்டன் சிகும்புரா ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டில் பல மாற்றங்களை செய்துள்ள நிலையில், மகளிர் கிரிக்கெட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை.