சிரியா போரிலிருந்து தப்பிக்க ஏஜியன் கடலை நீச்சல் அடித்து கடந்த ஒலிம்பிக் வீராங்கனை
தங்கள் நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து, தங்கள் கனவுகளை கைவிடாத அனைத்து விளையாட்டு வீரர்களையும் கௌரவிக்கும் வகையில் ஏப்ரல் 6ஆம் தேதியை அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக உலகம் கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட ஒரு தடகள வீராங்கனை தான் யுஸ்ரா மர்டினி. இவர் டீன் ஏஜ் பருவத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவிலிருந்து தப்பி ஓடியவர். பின்னர் அகதிகள் ஒலிம்பிக் குழுவின் ஒரு பகுதியாக 2016 மற்றும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். சிரியாவின் டமாஸ்கஸின் மையப்பகுதியில் பிறந்த யுஸ்ரா மர்டினியின் ஆரம்ப காலங்கள், அவளது தந்தையின் ஊக்குவிப்பால் நீச்சல் விளையாட்டில் ஆர்வம் கொண்டார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுகளால் அவரது ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது. ஆனால், உள்நாட்டுப் போர் அவளது தாய்நாட்டை அழித்தது, அவளுடைய கனவை கலைத்தது.
கடலை தாண்டிய வீராங்கனை
2015ஆம் ஆண்டில், யுஸ்ரா மர்டினியும், அவரது மூத்த சகோதரி சாராவும் பாதுகாப்பைத் தேடி நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். லெபனான் வழியாக துருக்கியை அடைந்த பிறகு, மார்டினியும் மற்றும் அவரது சகோதரி சாராவும், படகு மூலம் கிரேக்கத்திற்கு தப்பி செல்ல நினைத்தனர். ஆனால் வழியிலேயே படகின் இயந்திரம் செயலிழந்தது. அதில் இருந்த அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதால், யுஸ்ரா, சாரா மற்றும் மற்றொரு பயணியுடன் தண்ணீரில் குதித்து, கிரீஸை அடையும் வரை, பல மணி நேரம் படகைத் தள்ளி, கப்பலில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்றினார். 25 நாட்கள் பயணப்பட்ட பின்னர், அவர்கள் ஜெர்மனியை அடைந்தனர். பின்னர், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அகதிகள் ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக யுஸ்ரா பெயர் பொறிக்கப்பட்டது.