
யுஎஸ் ஓபன் அரையிறுதியில் தோல்வி; முடிவுக்கு வந்தது யுகி பாம்ப்ரியின் கிராண்ட் ஸ்லாம் கனவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் யுகி பாம்ப்ரி மற்றும் அவரது நியூசிலாந்து ஜோடி மைக்கேல் வீனஸ் ஆகியோரின் குறிப்பிடத்தக்க யுஎஸ் ஓபன் பயணம், ஆண்கள் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் முடிவுக்கு வந்தது. மூத்த வீரர்களான ஜோ சாலிஸ்பரி மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம், இவர்கள் 7-6 (2), 6-7 (5), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர். இந்த விறுவிறுப்பான போட்டி சுமார் மூன்று மணி நேரம் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் மைதானத்தில் நடைபெற்றது. யுகி பாம்ப்ரியின் வாழ்க்கையில் இதுவே முதல் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிப் போட்டியாக இருந்த நிலையில், அரையிறுதியில் தோற்று பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
யுஎஸ் ஓபன்
யுஎஸ் ஓபன் சாதனை
2023 ஆம் ஆண்டு மூத்த டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அவரது சாதனையை சமன் செய்யும் வாய்ப்பையும் யுகி பாம்ப்ரி இழந்தார். இதற்கு முன்பு, காலிறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி நிகோலா மெக்டிக் மற்றும் ராஜீவ் ராம் ஜோடியை வீழ்த்தி முன்னேறியிருந்தனர். அரையிறுதிப் போட்டியின் தொடக்கத்தில், பாம்ப்ரி மற்றும் வீனஸ் ஜோடி நல்ல நிலையில் காணப்பட்டனர். ஆனால், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், சாலிஸ்பரி மற்றும் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம் தோல்வியடைந்தனர். இந்த வெற்றியின் மூலம், சாலிஸ்பரி மற்றும் ஸ்குப்ஸ்கி ஜோடி, யுஎஸ் ஓபன் 2025 இரட்டையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இறுதிப் போட்டியில், அவர்கள் மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபல்லோஸ் ஜோடியை எதிர்கொள்வார்கள்.