LOADING...
ஃபிஃபா 2026: உலகக்கோப்பை வரலாற்றில் மிக தாமதமான கோல்! பெல்ஜியம் கேப்டன் யூரி திலெமான்ஸ் புதிய சாதனை
பெல்ஜியம் கேப்டன் யூரி திலெமான்ஸ் புதிய உலக சாதனை

ஃபிஃபா 2026: உலகக்கோப்பை வரலாற்றில் மிக தாமதமான கோல்! பெல்ஜியம் கேப்டன் யூரி திலெமான்ஸ் புதிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 02, 2026
11:03 am

செய்தி முன்னோட்டம்

தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் சுற்றில், கால்பந்து உலகமே வியந்து பார்க்கும் ஒரு மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. செனகால் அணிக்கு எதிராக நடைபெற்ற மிக விறுவிறுப்பான போட்டியில் பெல்ஜியம் அணியின் கேப்டன் யூரி திலெமான்ஸ் ஆட்டத்தின் 125வது நிமிடத்தில் கோல் அடித்து, ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகவும் தாமதமாக அடிக்கப்பட்ட கோல் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். சியாட்டல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் செனகாலை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பெனால்டி

வரலாற்றைத் தலைகீழாக மாற்றிய 125வது நிமிட பெனால்டி

போட்டியின் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடங்களில் பெல்ஜியம் கேப்டன் திலெமான்ஸ் கோல் அடிக்க முயன்ற போது, செனகால் பின்கள வீரர் கமாரா அவரைப் பின்னால் இருந்து தடுத்து ஃபவுல் செய்தார். நடுவர் முதலில் இதற்கு பெனால்டி வழங்க மறுத்தாலும், வீடியோ அசிஸ்டெண்ட் ரெஃப்ரி (VAR) மூலம் மிக நீண்ட நேரம் காட்சிகளை ஆய்வு செய்த பிறகு பெல்ஜியத்திற்கு பெனால்டி வாய்ப்பை உறுதி செய்தார். மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் இதய துடிப்பும் எகிறிய அந்த பதற்றமான 124 நிமிடம் 43வது வினாடியில், திலெமான்ஸ் பந்தை மிகத் துல்லியமாகக் கோல் வலைக்குள் செலுத்தி இந்த வரலாற்று சாதனையைத் தன்வசமாக்கினார்.

12 ஆண்டுகளா சாதனை முறியடிப்பு

12 ஆண்டுகால உலக சாதனையை முறித்த திலெமான்ஸ்

இதற்கு முன்னதாக உலகக்கோப்பை வரலாற்றில் மிகத் தாமதமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனை அல்ஜீரியாவின் ஜாபோ (121வது நிமிடம், 2014 இல் ஜெர்மனிக்கு எதிராக) வசம் இருந்தது. ஆனால், அது அந்த அணிக்கு ஆறுதல் கோலாக மட்டுமே அமைந்தது. உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டியில் ஆட்டம் சமநிலையில் இருந்த போது, வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி நிமிட கோலாக இதற்கு முன்பு 1990 இல் இங்கிலாந்தின் டேவிட் பிளாட் பெல்ஜியத்திற்கு எதிராக 119வது நிமிடத்தில் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்பொழுது திலெமான்ஸ் அந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து 125வது நிமிடத்தில் புதிய சிகரத்தைத் தொட்டுள்ளார்.

Advertisement

85 நிமிடங்கள்

85 நிமிடங்களுக்குப் பின் நிகழ்ந்த அற்புதம்

இந்தப் போட்டி திலெமான்ஸின் தனிநபர் சாதனைக்காக மட்டுமன்றி, பெல்ஜியம் அணியின் அசாத்திய மீண்டெழுதலுக்காகவும் வரலாற்றில் பேசப்படும். போட்டியின் 51வது நிமிடத்திலேயே செனகால் அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 85வது நிமிடம் வரை 0-2 என பின்தங்கியிருந்த ஒரு அணி, உலகக்கோப்பை நாக்-அவுட் வரலாற்றில் அதற்குப் பின் மீண்டு வந்து வென்றதே கிடையாது. ஆனால், 86வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்காக ரொமேலு லுகாகுவும், 89வது நிமிடத்தில் திலெமான்ஸும் அடுத்தடுத்து 3 நிமிட இடைவெளியில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்து, கூடுதல் நேரத்தில் வெற்றியையும் பறித்து ஒட்டுமொத்த கால்பந்து உலகிற்கும் அதிர்ச்சியளித்துள்ளனர்.

Advertisement