LOADING...
சதுரங்கத்தில் வரலாற்றுச் சாதனை: FIDE ரேட்டிங் பெற்ற உலகின் இளம் வீரர் ஆனார் 3 வயது இந்திய சிறுவன்
FIDE ரேட்டிங் பெற்ற உலகின் இளம் வீரரானார் 3 வயது இந்திய சிறுவன்

சதுரங்கத்தில் வரலாற்றுச் சாதனை: FIDE ரேட்டிங் பெற்ற உலகின் இளம் வீரர் ஆனார் 3 வயது இந்திய சிறுவன்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 05, 2025
04:45 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன் சரவாக்ய சிங் குஷ்வாஹா, அதிகாரப்பூர்வ FIDE (சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு) ரேட்டிங்கைப் பெற்ற உலகின் மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். சரியாக மூன்று வயது, ஏழு மாதங்கள் மற்றும் 20 நாட்களில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். கூடுதல் விவரங்கள் இங்கே:-

முறியடிப்பு

சாதனைப் பதிவு முறியடிப்பு

முன்னர் இதே சாதனையைப் படைத்த இந்திய வீரர் அனிஷ் சர்க்காரின் சாதனையைச் சரவாக்ய சிங் குஷ்வாஹா முறியடித்துள்ளார். அனிஷ் சர்க்கார் கடந்த ஆண்டு நவம்பரில் இந்த மைல்கல்லை எட்டும்போது அவருக்கு மூன்று வயது, எட்டு மாதங்கள் மற்றும் 19 நாட்களாக இருந்தது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதிலேயே, குஷ்வாஹா தற்போது 1,572 என்ற விரைவான (Rapid) ரேட்டிங்கைப் பெற்றுள்ளார். FIDE ரேட்டிங்கைப் பெற, ஒரு வீரர் குறைந்தபட்சம் ஒரு FIDE ரேட்டிங் பெற்ற வீரரைத் தோற்கடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு

சிறுவனின் இலக்கு என்ன?

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்வாஹா, மாநிலம் முழுவதும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடந்த நிகழ்வுகளில் மூன்று ரேட்டிங் பெற்ற வீரர்களைத் தோற்கடித்து இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ளார். "எங்கள் மகன், FIDE ரேட்டிங் பெற்ற உலகின் மிக இளைய சதுரங்க வீரராக மாறியது எங்களுக்குப் பெருமையளிக்கிறது. அவன் ஒரு கிராண்ட் மாஸ்டராக வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்று குஷ்வாஹாவின் தந்தை சித்தார்த் சிங் கூறியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சமீபத்திய உலக சாம்பியன் டி.குகேஷ் போன்ற சிறந்த வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ள நிலையில், இந்தக் குட்டிச் சதுரங்க மேதை எதிர்காலத்தில் பெரிய வெற்றிகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement