வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய இளம் மல்யுத்த வீரர்கள்
இந்திய மல்யுத்த வீரர்களான ஆன்டிம் பங்கல் மற்றும் சுஜீத் கல்கல் ஆகியோர் புதன்கிழமை (ஜூலை 19) டெல்லி உயர்நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி சோதனைகளுக்கு வழங்கப்பட்ட விலக்குகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனைவருக்கும் சமமான நியாயமான தேர்வு செயல்முறையை கோரினர். இரு மல்யுத்த வீரர்களின் கூட்டு மனு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன் வந்த நிலையில், அவர் வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிட்டார். இருவரும் தங்கம் மனுவில், இந்திய ஒலிம்பிக் சங்க தற்காலிகக் குழு இருவருக்கும் விலக்கு வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளம் மல்யுத்த வீரர்களை ஓரங்கட்டுவதாக குற்றச்சாட்டு
சுஜீத்தின் தந்தை தயானந்த் கல்கல் இது குறித்து அளித்த பேட்டியில், "இந்த மல்யுத்த வீரர்கள் (வினேஷ் மற்றும் பஜ்ரங்) ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது, தங்கள் போராட்டம் நீதிக்காகவும், இளைய மல்யுத்த வீரர்களுக்காகவும் இருப்பதாகவும் கூறினர். ஆனால், இப்போது அவர்கள் இளம் மல்யுத்த வீரர்களை ஓரங்கட்ட விரும்புகிறார்கள். எனவே இந்த முடிவுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது" என்று கூறினார். மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்களின் எதிர்ப்பின் ஆரம்பம் முதல், சோதனைகளில் இருந்து விலக்கு பெறுவதே நோக்கமாக இருந்தது என்றும், அதனால்தான் நாங்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார். முன்னதாக, ஆன்டிம் பங்கல் மற்றும் சுஜீத் கல்கல் தனித்தனியாக காணொளி வெளியிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.