டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு
மிகவும் தாமதமாகி வரும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பிற்கான தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சனிக்கிழமை (டிசம்பர்9) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி எம்எம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஆகியவை ஒரே நாளில் நடைபெறும் என்றும், ரிட் மனுவின் முடிவுகளுக்கு உட்பட்டு தேர்தல் முடிவுகள் அமையும் என்றும் தெரிவித்துள்ளார். ரிட் மனு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தின் போது நடைபெறும் இந்த தேர்தல், ஆகஸ்ட் 7ஆம் தேதி தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் பின்னணி
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது கடந்த ஆண்டு இறுதியில் வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடைசியாக ஆகஸ்ட் 12 அன்று தேர்தல் திட்டமிடப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 11 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தேர்தலுக்கு விதித்த தடையை நீக்கிய நிலையில், டிசம்பர் 21 அன்று தேர்தல் நடக்க உள்ளது. அதே நேரம் இந்த தேர்தல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.